HEADLINES:
June 19 2019
'ஹிந்து பாகிஸ்தான்' விவகாரம்: சசி தரூருக்கு கொலை மிரட்டல்
17 July 2018

புதுடில்லி : ''ஹிந்து பாகிஸ்தான் என, கருத்து தெரிவித்ததால், பா.ஜ., இளைஞரணி அமைப்பைச் சேர்ந்தவர்கள், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்,'' என, காங்., - எம்.பி., சசி தரூர் தெரிவித்து உள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், சசி தரூர், 62. காங்., - எம்.பி.,யான இவர், சமீபத்தில், 'அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றால், இந்தியா, ஹிந்து பாகிஸ்தானாக மாறி விடும்' என, கருத்து தெரிவித்தார். இது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சசி தரூரின் பேச்சுக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்தது. 

மேலும், 'பொது நிகழ்ச்சிகளில் பேசும் போது, கவனமாக பேச வேண்டும்' என, காங்கிரஸ் மேலிடமும், அவரை அறிவுறுத்தியது. இது தொடர்பான வழக்கில், அடுத்த மாதம், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி, கோல்கட்டா உயர் நீதிமன்றம், சசி தரூருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள சசி தரூரின் தொகுதி அலுவலகத்தை, பா.ஜ., இளைஞர் அணியினர், நேற்று அடித்து நொறுக்கினர். மேலும், 'சசி தரூரே பாகிஸ்தானுக்கு போ' என, கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து, சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' சசி தரூர் கூறியதாவது: திருவனந்தபுரத்தில் உள்ள என் அலுவலகத்தை, பா.ஜ.,வினர் அடித்து நொறுக்கி விட்டனர்; என்னிடம் மனு அளிக்க வந்த நபர்களையும் தாக்கி உள்ளனர்.எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்; இது, ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல். இது குறித்து, கேரள மாநில போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

 

Related Stories