HEADLINES:
June 16 2019
குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
11 July 2018

புதுடில்லி: குப்பையால் நாறுது டில்லி, தண்ணீரில் மூழ்குது மும்பை, மத்திய, மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் இருப்பது சரியல்ல என உச்சநீதிமன்றம் சாடியுள்ளது
இந்தியாவில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கான கொள்கையை வகுக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான கொள்கைகள் வகுக்கப்படவில்லை. மேலும் திடக்கழிவு மேலாண்மையைச் செயல்படுத்தாத, அதற்கான கொள்கையை வகுக்காத 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசையும், மாநில அரசையும் நீதிபதிகள் கடுமையாக சாடினர்..

நீதிபதிகள் கூறியதாவது: 
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் ஏன் தாமதம். டில்லியில் ஓக்லா, பால்ஸ்வா, காஜிப்பூர் ஆகிய 3 இடங்களிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும், துணைநிலை கவர்னர் அனில் பைஜாலும், அதிகாரப்போட்டி நடத்துகின்றனர்.. இவர்களின் கையாளாகாத தனத்தால் டில்லி நகரம் குப்பைகளுக்குக் கீழ் புதைந்து நாறுகிறது, அதே போன்று மும்பையைப் பார்த்தால், மழை நீருக்குள் மூழ்கி வருகிறது. ,இதுவரை மத்திய அரசும், மாநில அரசும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டு ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், எங்களை வார்த்தைகளால் தாக்குகிறீர்கள்.. ஆளக்கூடிய ஆட்சியாளர்களான நீங்கள் பொறுப்பில்லாமல் இருப்பது சரியல்ல... ..யார் பொறுப்பு என்பதை நாளைக்குள் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் ஆவேசத்துடன் கூறினர். வழக்கை ஆகஸ்ட் 7- தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

 

 

Related Stories