HEADLINES:
November 21 2019
காஷ்மீரில் கல் எறிய சிறுவர்களை பயன்படுத்தும் பயங்கரவாத அமைப்புகள்: ஐ.நா.,
29 June 2018

புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினர் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்த, அந்த மாநில சிறுவர் - சிறுமியரை, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தின' என, ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை, 2017ல், உள்நாட்டுச் சண்டை மற்றும் ஆயுத மோதல்களால் பலியான, சிறுவர் - சிறுமியர் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: இந்தியாவின், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், 2017ல், பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்த, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்பினர், காஷ்மீர் மாநில சிறுவர் - சிறுமியரை பயன்படுத்தினர். இந்த சிறுவர் - சிறுமியர், பாதுகாப்பு படையினர் மீது, கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

கடந்த, 2017ல், சர்வதேச அளவில் நடந்த உள்நாட்டுச் சண்டை மற்றும் ஆயுத மோதல்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் உயிர் இழந்தனர். மேலும், ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்தனர். மத்திய கிழக்கு நாடான, ஏமனில், 1,300க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் உயிரிழந்தனர். 

கடந்தாண்டில், 21 ஆயிரம் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில், ஈராக், மியான்மர், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் மட்டும், 10 ஆயிரம் சிறுவர் - சிறுமியர் உயிரிழந்தனர். தெற்கு ஆப்ரிக்க நாடான, நைஜீரி யாவில், 450க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியரை, மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Stories