HEADLINES:
May 26 2018
பயங்கரவாதத்துக்கு ஆள் பிடிக்கும் மையங்களாக செயல்படும் சிறைகள்
21 February 2018

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, பயங்கரவாதத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் மையமாக செயல்படுகிறது என, மாநில, சி.ஐ.டி., போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது. ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது.


அறிக்கை :

மாநிலத்தின், ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, பயங்கரவாதத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் மையமாக செயல்படுவதாக, மாநில, சி.ஐ.டி., போலீசார் அறிக்கை தெரிவிக்கிறது. மாநில, சி.ஐ.டி., எனப்படும், குற்ற விசாரணை துறை, ஐ.ஜி., - ஏ.ஜி.மிர் தயாரித்துள்ள இந்த அறிக்கையை, மாநில, டி.ஜி.பி.,யான, எஸ்.பி.வைத், மாநில அரசுக்கு அனுப்பியுள்ளார்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறை, நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. இந்த சிறையில், பல முக்கியமான பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, உள்ளூரில் ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்களால், சிறை அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். இதனால், சிறையில் இருந்தாலும், பயங்கரவாதிகள் தங்களுடைய ராஜாங்கத்தை நடத்தி வருகின்றனர்.


கடிதம் :

பல முக்கியமான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது, இந்த சிறையில் தான் நடக்கிறது. சிறையில் இருந்து உத்தரவு கிடைத்த பின், அந்த நபர்கள், பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுகின்றனர். இந்த சிறையில் நடக்கும் நடவடிக்கைகள் குறித்து, சிறை துறைக்கு தெரிவிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, முகமது நவ்னீத் தப்பிச் சென்றான்.

இதனால், பணியிடமாற்றம் செய்யப்பட்ட, முன்னாள் சிறை துறை, டி.ஜி.பி.,யான, எஸ்.கே. மிஸ்ரா, மாநில அரசுக்கு இது தொடர்பாக பல முறை கடிதம் எழுதியுள்ளார்; ஆனாலும், நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

Related Stories