HEADLINES:
May 22 2018
கட்சிக்கு குற்றவாளி தலைமை தாங்கலாமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
13 February 2018

புதுடில்லி: குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட பின், கட்சிக்கு தலைமை தாங்கலாமா; தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யலாமா என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகள், கட்சிக்கு தலைமை தாங்குவதை தடுக்கக் கோரி, பா.ஜ., வழக்கறிஞர், அஷ்வினி குமார் உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர், லாலு பிரசாத் யாதவ், சசிகலா உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக, ஊழல் புகார், நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட போதும், அவர்கள், கட்சிகளில் தலைமை பொறுப்பு வகிப்பதை, தன் மனுவில், அஷ்வினி குமார் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சிக்கு, அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அத்தகைய கட்சிக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் கருத்து தெரிவித்துள்ளது. இத்தகைய அதிகாரம் தனக்கு இருந்தால், அரசியலில் குற்றவாளிகள் நுழைய முடியாது என்றும், தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள் தலைமை தாங்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை, தேர்தல் கமிஷனுக்கு, நீதிமன்றம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும்.குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட பின், கட்சிக்கு தலைமை தாங்கலாமா; தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யலாமா என்பது குறித்து, மத்திய அரசு, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

 

 

Related Stories