புளோரிடா : உலகின் மிகப்பெரிய தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றான அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், செவ்வாய் கிரகம் வரை செல்லும் சக்தி கொண்ட ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தி சோதனை செய்துள்ளது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனரவால் விண்வெளி தளத்தில் இருந்து 'ஃபால்கன் ஹெவி' ராக்கெட் ஏவப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கனவு திட்டமான இந்த ராக்கெட், இன்னும் சில வருடங்களில், நிலவுக்கும், செவ்வாய்க்கும் செல்லும் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியாக வல்லமை கொண்டதாக கருதப்படுகிறது. ஏற்கனவே, தான் ஏவிய ராக்கெட்டை வெற்றிகரமாக தானியங்கி தொழில்நுட்பம் மூலம் தரையிறக்கி சாதனை படைத்த நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ். ராக்கெட் தொழில்நுட்பத்தில் பல நவீன யுக்திகளை கையாண்டு வருவதால் இதன் அடுத்தகட்ட திட்டங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த ராக்கெட் வெற்றிகரமாக செயல்பட்டால், நாசா இதை தனது நிலவு, மற்றும் செவ்வாய் திட்டங்களுக்கு பயன்படுத்தும் என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சி நிபுணர்கள். இந்த சக்திவாய்ந்த ராக்கெட், ஆற்றல் மற்றும் போக்குவரத்து தொழில்முனைவர் எலான் மஸ்க்கில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த ராக்கெட் 70 மீட்டர்(229.6 அடி) உயரமும், 12.2 மீட்டர் அகலமும் உடையதாகும். மொத்தம் 27 இன்ஜின்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளன.