HEADLINES:
October 19 2018
4வது முறையாக இளம் இந்தியா உலக சாம்பியன்
03 February 2018

மவுன்ட் மவுன்கானுய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை பைனலில், மன்ஜோத் கல்ரா சதம் கடந்து கைகொடுக்க, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இளம் இந்திய அணி, 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நியூசிலாந்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடந்தது. இதன் பைனலில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்டிங்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஜோனாதன் மெர்லோ (76) ஆறுதல் தந்தார். ஜாக் எட்வர்ட்ஸ் (28), கேப்டன் ஜாசன் சங்ஹா (13) உள்ளிட்ட மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி, 47.2 ஓவரில், 216 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் இஷான் போரல், ஷிவா சிங், கமலேஷ், அனுகுல் ராய் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி, 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 23 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. பின் மீண்டும் போட்டி துவங்கியதும், 
கேப்டன் பிரித்வி ஷா (29) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய மன்ஜோத் கல்ரா, சதம் கடந்தார். சுப்மன் கில் (31) நம்பிக்கை தந்தார். பின் இணைந்த மன்ஜோத் கல்ரா, ஹர்விக் தேசாய் ஜோடி பொறுப்பாக ஆடியது. சுந்தர்லாந்து பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹர்விக் தேசாய், வெற்றியை உறுதி செய்தார்.இந்திய அணி, 38.5 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது . மன்ஜோத் கல்ரா (101), ஹர்விக் தேசாய் (47) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் சுந்தர்லாந்து, உப்பால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

நான்காவது முறை:

இந்த வெற்றியின்மூலம் இளம் இந்திய அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு முன், 2000, 2008, 2012ல் கோப்பை வென்றிருந்தது. இதன்மூலம், அதிக முறை ஜூனியர் உலக கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவை (3 முறை) முந்தி முதலிடம் பிடித்தது இந்தியா

 

 

Related Stories