HEADLINES:
September 19 2018
மதுரை மீனாட்சி கோயிலில் தீ: மடிந்த புறாக்கள் கதறித்துடித்த பக்தர்கள்
03 February 2018

மதுரை: மதுரை மீனாட்சி கோயிலில் ஏற்பட்ட தீயால் ஏராளமான புறாக்கள் கருகி பலியாகின. பக்தர்கள் கதறித்துடித்து கண்ணீர் சிந்தினர்.

'கோயிலுக்குள் கடைகளை அனுமதிக்க கூடாது' என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், அம்மன் சன்னதியில் 40, சுவாமி சன்னதியில் 125 என ஏராளமான கடைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆயிரம் கால் மண்டம் அருகே ஒரு புறம் பற்றிய தீ எதிர்ப்புற கடைகளுக்கும் பரவியது. கடைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளில் பரவிய தீ விஸ்வரூபம் எடுத்தது. விழாக்காலங்களில் பயன்படுத்தப்படும் பந்தல் பொருட்கள் பழைய திருக்கல்யான மண்டம் அருகே அறையில் வைக்கப்பட்டிருந்தன. இதில் தீப்பிடித்து மேற்கூரை பூச்சு சரிந்து விழுந்தது. தீப்பிடித்த கடைகளில் இருந்த கல்துாண் ஒன்றும் சரிந்தது. பல இடங்களில் சுவர், மேற்கூரை பூச்சுக்கள் பெயர்ந்தன. பழங்கால சிற்பங்கள் கருகி சேதம் அடைந்தன. ஓவியங்களும் சிதைந்தன. ராஜகோபுர பகுதியில் இருந்த நந்தி சிலையும் சேதம் அடைந்தது. கோயிலில் தஞ்சம் அடைந்திருந்த ஏராளமான புறாக்கள் கருகி மடிந்தன. இதைக் கண்ட பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தீ அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின், ஜெனரேட்டர் உதவியுடன் பணி தொடர்ந்தது. மூன்று தீயணைப்பு வாகனங்கள், ஐந்துக்கும் மேற்பட்ட மாநகராட்சி வாகனங்கள் தீயை அணைக்க பயபன்படுத்தப்பட்டன. இதில் இரு வாகனங்கள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டன. தீயணைப்பு வாகனங்களில் இருந்த குழாய்களை தீப்பிடித்த பகுதி வரை எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனாலும் பணியில் தாமதம் ஏற்பட்டது. 

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து

 

 

குவிந்த பக்தர்கள்; விரட்டிய போலீஸ்:

கோலில் தீப்பிடித்த உடன் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 'கோயிலில் கடைகள் வைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம்' என இந்து அமைப்புகளும், பக்தர்களும் ஆவேசமாக குரல் எழுப்பினர். போலீசார் அவர்களை வெளியேற்ற முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். கோயில் நிர்வாகத்தை கண்டித்து பக்தர்கள் கோஷம் எழுப்பியவாறு இருந்தனர். கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தக்கார் முத்து கண்ணன், கோயில் இணை கமிஷனர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் தீயணைக்கும் பணியை துரித்தப்படுத்தினர்.

 

வெள்ளிக்கிழமை ‛தீ' :

கோயிலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்றும் தீப்பிடித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளி அன்று காலை 11 மணிக்கு மடப்பள்ளியில் தீப்பிடித்துள்ளது. இதை ஊழியர்கள் அணைத்துள்ளனர். ஆனால், இந்த விஷயம் கசியாமல் அதிகாரிகள் ‛அமுக்கி'விட்டனர். அதற்கு பிறகாவது எச்சரிக்கையாக இருந்திருந்தால், நேற்று நடந்த விபத்தையும் தவிர்த்திருக்கலாம். 

 

கிழக்கு கோபுரத்துக்கு சோதனை:

மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு கோபுர பகுதியில் இயற்கை சீற்றம், விபத்து தொடர் கதையாகி வருகிறது. கிழக்கு கோபுர பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ, பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. கடந்த 2015ல் இதே பகுதியில் தான் மின்னல் தாக்கி மேற்கூரை சேதம் அடைந்தது. கடந்த ஆண்டு அக்.,4ல் மதுரையில் பெய்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கிழக்கு கோபுரம் வழியாக புகுந்த மழை நீர் சுவாமி சன்னதியை சூழ்ந்தது. இதற்கு சில நாட்களுக்கு முன்தான் 'துாய்மை இந்தியா'திட்டத்தில் சிறந்த கோயிலுக்கான விருதுக்கு மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு கிழக்கு கோபுர பகுதியில் தீப்பிடித்தது. இது 'சகுனத் தடை' என சிவாச்சாரியார்கள் வேதனை தெரிவித்தனர்.

 

இடிந்து விழுந்த மேற்கூரை:

3 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்த தீ கட்டுக்குள் வந்த நிலையில் அப்பகுதியின் மேற்கூரை பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இரவு 10:30 மணிக்கு பற்றிய தீ ஆக்ரோஷமாய் எரிந்தது. நீண்ட போராட்டத்துக்கு பின் ஒரு வழியாக இரவு 1:15 மணிக்கு கட்டுக்குள் வந்தது. இரவு 1:30 மணிக்கு, தீ ஏற்பட்ட பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதுகுறித்து கலெக்டர் வீரராகவ ராவ், தக்கார் கருமுத்து கண்ணன் கூறுகையில், ''விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. கோயிலுக்குள் கடைகளை அகற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும். தீயால் உயிர் சேதம் இல்லை. 35 கடைகள் சேதம் அடைந்தன. நாளை (இன்று) வழக்கம் போல கோயில் நடை திறக்கப்படும்,'' என்றனர்.

 

 

Related Stories