HEADLINES:
September 20 2018
சுங்கசாவடி கட்டணத்தில் புது மாற்றம்?
02 February 2018

புதுடில்லி: நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் கட்டணம் செலுத்தும் முறையில் புது மாற்றம் வர போகிறது. குறிப்பிட்ட சாலை முழுவதற்குமான கட்டணத்திற்கு பதிலாக, செல்லும் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 

 

இதுவரை முழு கட்டணம்

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு, சுங்கசாவடி அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் செல்பவர்கள் இந்த சுங்கசாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. ஒரு நெடுஞ்சாலையில் பல நூறு கி.மீ., தூரத்திற்கு சாலை மேம்படுத்தப்பட்டால் அந்த சாலை முழுவதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த சாலையில் குறைந்த தூரம் சென்றாலும் முழு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

 

'குளோஸ்டு டோல் பாலிசி'

இதற்கு முன், ' ஓப்பன் டோல் பாலிசி' என்ற சாலை முழுவதற்குமான கட்டணம் திட்டம் அமலில் இருந்தது. தற்போது, ' குளோஸ்டு டோல் பாலிசி' அமலாக உள்ளது. இந்த நடைமுறையில் ஒரு வாகனம் குறிப்பிட்ட சாலையில் எத்தனை கி.மீ., பயணம் செய்கிறதோ அதற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்தினால் போதும்; முழு கட்டணம் செலுத்த தேவையில்லலை. இந்த புதிய நடைமுறை சோனை முறையில், டில்லி வழியாக ஹரியானாவில் இருந்து உ.பி., செல்லும் கிழக்கு புறவட்ட எக்ஸ்பிரஸ் சாலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் மத்திய அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

 

 

ஜெட்லி விளக்கம்

இது குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ' ஒரு சாலையை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்தினால் போதும் என்ற கொள்கையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. சுங்கசாவடிகளில் வாகனத்தை நிறுத்துவதால் ஏற்படும் காலதாமதத்தை நீக்க, முன்கூட்டியே சுங்க சாவடி கட்டணத்தை செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது' என்றார்.

 

 

Related Stories